டீக்கடை கலாசாரத்தில் தீப்பிடித்து வளர்ந்தவை இரண்டு விஷயங்கள். ஒன்று வீட்டுக்குத் தெரியாமல் பஜ்ஜி சாப்பிடுவது, மற்றொன்று நாய்கள் மேய்வது. போண்டா பஜ்ஜி முதல் போர்பான் பிஸ்கட் வரை பல்சுவைக்கு அடிமையாகிய நாய்கள், நம்மைப் போலவே டீக்கடை நிழலே சொர்க்கம் என்று வாழத்தொடங்கிவிட்டன.
“நாயே” என்ற சொல்லுக்கு பொருள்கள் பல என்றாலும், அனைத்தும் திட்டும் அர்த்தங்களே. இன்றோ, ஒரு நாயை “நாய்” என்று சொல்வதே கங்கையில் கரைக்கவேண்டிய பாவம் ஆகிவிட்டது. அதற்குப் பெயர் வைத்து பிறந்த நாள் கொண்டாடியது போக, “ஸ்பா டே” என்று அமர்க்களம் செய்து இன்ஸ்டாக்ராமில் பதிவிடுகிறார்கள். அதைப் பார்த்து கருத்து சொல்பவன் கொடூரமானவனாகிறான். பதில் சொல்லாதவன் மனிதத் தன்மையை இழந்தவனாகிறான். இதையொட்டி, பக்கத்துத் தெருவில் உள்ள டீக்கடையைச் சார்ந்த குறுக்கு சந்து நாய்கள் கட்சியின் தலைவர் பௌ-பௌ வுடன் ஒரு சிறிய உரையாடல்.
பௌ: பௌ பௌ… அர மணி நேரத்துல மோட்டார் நாய்கள் வந்தால் துரத்த வேண்டிய வேல இருக்கு, கொஞ்சம் சீக்கிரம் முடிச்சிக்கலாமா?
ந: ஓ ரைட்டு. கடந்த பத்து வருஷத்துல உங்க ஆளுங்க இந்த ஏரியால இவ்ளோ பழகிட்டாங்களே, நீங்க உங்க வீட்ட மிஸ் பண்ணலியா?
பௌ: வீடா? எங்க வீடு காடுதான். வேட்டையாடும் இனத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். கால மாற்றத்துல மனிதர்களோடு சேர்ந்தால் உணவு சுலபமாகக் கிடைக்குதேனு வந்து சேர்ந்துக்கிட்டோம். எங்கள் அண்ணன் நரி இருக்கிறார், ஓநாய் சித்தப்பா இருக்கிறார். இருவரும் மாறுவேடத்தில் கில்லிகள். ஆனால் என்ன செய்வது, நடிக்கத் தெரியவில்லையே. நாக்கை நீட்டி வாலாட்டினால் எங்கள் அழகில் மயங்கி மனிதர்களும் சக மனிதர்கள்மேல் காட்டாத பாசத்தைக் காட்டுகிறார்கள். அதை எவராவது கேட்டால் வாயில்லாப் பிராணி என்ன செய்யும் என எங்கள் உரிமைகளுக்கென சட்டம் எழுதுகிறார்கள். மொத்தத்தில் பரிணாம வளர்ச்சியில் சுகத்தை அனுபவிப்பது நாங்கள்தான்.
ந: அப்போ நீங்க இங்க புழங்குறது சுய நலத்திலா? இல்லை மனிதர்கள் மீது உங்களுக்கு உண்மையிலேயே பாசம் உண்டா?
பௌ: பாசம் இல்லாமலா நீங்க அடிக்கிற கூத்த பொறுத்துக் கொண்டிருக்கோம்? பாசமெல்லாம் இருக்கு. ஆனால் குரைப்பதோ, ஊளையிடுவதோ எங்கள் இயல்பு. காட்டில் குடும்பமாகச் செய்தோம், இங்கு கிடைக்கும் குடும்பத்தோடு செய்கிறோம். ரீல்ஸில் ஆடுனாலும் வேட்டையாடுவது தானே எங்கள் இயல்பு? உங்கள் மோட்டார் நாய்களைப் பார்க்கும்போது அந்த இயல்பு திரும்புகிறது. துரத்துகிறோம். அது நாய் இல்ல, உயிரற்ற விலங்கு என எங்களுக்குப் புரியும்வரை துரத்துகிறோம், பிறகு உங்கள்மேல் பயம் கொண்டோ கோபம் கொண்டோ துரத்துகிறோம். பாதி ஓடுவதற்குள் ஒரு சிறிய மஜா வந்துவிடும், நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு துரத்துகிறோம்.
ந: என்ன சொல்வதென்று தெரியவில்லை. கடைசிக் கேள்வி. இன்ஸ்டாக்ராம் நாய்கள் பற்றிய உங்களது கருத்து?
பௌ: ஒரு வார்த்தயில் சொல்லவேண்டும் என்றால், கொடுத்துவைத்தவர்கள். அனுபவிக்கிறார்கள். எங்கள் சங்கம் சார்பாகச் சொல்லவேண்டும் என்றால், கொழுப்பெடுத்தவர்கள். இனத்தின் மானத்தை வாங்குகிறார்கள். இந்த விவகாரத்தில் பூனைக்கூட்டத்தைப் பார்த்தால் எங்களுக்குப் பொறாமை தான். தன் இயல்பிலிருந்து துளி கூட மாறவில்லை. இருந்தாலும் நேசிக்கப்படுகிறார்கள். எங்கள் இனமோ, உங்கள் ரசனைக்கேற்ப நடந்தால் நண்பனாகிறோம். இயல்பைச் சிறிது காட்டினாலும் நாயாகிறோம்.
ந: நேரகாணலுக்கும் டீ-க்கும் நன்றி. நான் கிளம்புகிறேன்.
பௌ: ஆமாம். மோட்டார் நாய் கிளம்புகிறதை என்னால் உணரமுடிகிறது. வேலையைப் பாப்போம். பௌஊஊஉ…
அப்போது புரிந்தது, பௌபௌ காத்துக்கொண்டிருந்த மோட்டார் நாய் யாரென்பது.
x
This is the first time I saw your story. Very excellent. வாழ்க வளமுடன்.
ReplyDeleteHa ha narration is good👍
ReplyDeleteHa ha.. எழுத்து நடை அருமை
ReplyDeleteஅருமை 😃
ReplyDeleteVery Nice Narration
ReplyDeleteஆகா! அருமை. பௌபௌக்களால் கடிபட்டு சித்திரவதைப்படும் குழந்தைகள் குறித்தும் ஒரு கேள்வி கேட்டிருக்கலாம்
ReplyDeleteஅடடே!
ReplyDeleteஅருமையான எழுத்து நடை...
ReplyDeleteசிறப்பாக தொடர வாழ்த்துக்கள்
அருமையான கட்டுரை
ReplyDeleteஅடடா என்ன ஒரு சிந்திக்க வைக்கும் உரையாடல் கொண்ட ஒரு அழகான எழுத்து நடை. சிந்திக்கும் நோய் குணமாகி விட்டாலும் எழுதுவதை நிறுத்தி விடாதே✨
ReplyDelete